நூல் வெளியீடுகள்
1. திருக்குறள் கருத்துப்புலப்பாட்டில் அணியியல்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையுடன் ஜேஎன்யு தமிழ்ப்பிரிவில் ‘திருக்குறளில் கருத்துப்புலப்பாட்டு முறைகளும் அணி இலக்கணச் சிந்தனையும்’ என்னும் பொருண்மையில் 2014 மார்ச் 27,28,29 நாட்களில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பாகும்.
2. செவ்விலக்கிய மரபுகள்: தமிழும் பிற மொழிகளும்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையுடன் ஜேஎன்யு தமிழ்ப்பிரிவில் 2012 ஏப்ரல் 3,4,5 நாட்களில் நடத்தப்பெற்ற ‘இந்திய இலக்கிய மரபில் தமிழ்ச் செவ்விலக்கியங்கள்’ என்ற பொருண்மையிலான தேசியக் கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
3. உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையுடன் ஜேஎன்யு தமிழ்ப்பிரிவில் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19,20,21 உலக, இந்திய மொழிகளில் திருக்குறள் மொழிபெய்ர்ப்புகள் என்ற பொருண்மையில் நடந்த மூன்றுநாள் தேசியக் கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
4. அகப்பொருளும் சமஸ்கிருத முக்தகப் பாடல்களும்
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பேரா. ஸிக்பிரிட் லீன்ஹார்டு (Siegfried Lienhard 1924- 2011) என்பவர் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தின் “இந்தியவியல்” பேராசிரியராகப் பணியாற்றியவர். இவர் பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கான இலக்கிய வரலாற்றை எழுதியுள்ளார். நேபால் நாட்டின் “நேவாரி” மக்களின் பாடல்களைத் தொகுப்பாக்கம் செய்துள்ளார். இவர் ஆங்கிலத்தில் எழுதிய மூன்று கட்டுரைகளின் தொகுப்பாக்கமாகவும் தமிழ் மொழிபெயர்ப்பாகவும் இந்நூல் அமைகிறது. தமிழ் அக இலக்கியங்களின் தாக்கத்தைச் சமஸ்கிருத முக்தகப் பாடல்களில் காண முடிகிறது. எனவே, இப்பாடல்கள் திராவிட இலக்கிய மரபை அடிப்படையாய்க் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கலாம் எனும் கருத்தை இவர் தனது கட்டுரைகளில் முன் வைத்துள்ளார். பல்வேறு இடங்களில் இடம்பெற்றிருந்த இவரது கட்டுரைகளை ஜேஎன்யு தமிழ்ப்பிரிவின் ஆய்வாளர் திரு. பு. கமலக்கண்ணன் தொகுத்துத் தமிழாக்கம் செய்துள்ளார்.
5. பிரஞ்சு தேவதைக் கதைகள்
பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் சார்லஸ் பெரால்ட் (Charles Perrault 1628 - 1703) ஆவார். இவரே Fairy tales (தமிழில், தேவதைக் கதைகள்) எனப்படும் இலக்கிய வகைமையை (Literary genre) முதன்முதலாக உருவாக்குகிறார். ஏற்கெனவே நாட்டார் வழக்காறுகளில் இடம்பெற்றிருந்த கதைகளை அடிப்படையாகக் கொண்டு இவர் இவ்வகைமையை உருவாக்கியுள்ளார். புகழ்பெற்ற Cinderella, Little Red Riding Hood, Puss in Boots, Bluebeard முதலிய கதைகளை எழுதியுள்ளார். இவ்வகையில், சார்லஸ் பெரால்ட் எழுதிய Bluebeard எனும் கதை உட்படப் பத்துக் கதைகளின் தமிழாக்கமாக நீலத்தாடிக்காரன் எனும் தலைப்பிலான இந்நூல் அமைகிறது. இக்கதைகளை ஆங்கில வழித் தமிழாக்கம் செய்துள்ளார், ஜேஎன்யு தமிழ்ப்பிரிவின் முனைவர்பட்ட ஆய்வாளர் திரு. நரேஷ் வேல்சாமி.
6. எனது இலங்கைச் செலவு
ஜேஎன்யு தமிழ்ப்பிரிவின் முனைவர்பட்ட ஆய்வாளர் திரு. த.க. தமிழ்பாரதன் தனது இலங்கைப் பயணம் குறித்து எழுதியுள்ள பயண நூலாக இந்நூல் அமைகிறது. தமிழ் மேடைப் பேச்சுப் போட்டிகளில் உலகளவிலான கவனத்தைப் பெற்றது மலேசிய ஊடகம் நடத்தும் பேசு தமிழா பேசு எனும் தலைப்பிலான போட்டியாகும். 2017 ஆம் ஆண்டு இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற இப்போட்டியில் திரு. த.க.தமிழ்பாரதன் இந்தியப் பிரதிநிதியாகப் பங்கேற்று இரண்டாம்நிலை வெற்றி பெற்றார். அப்போது இலங்கையில் பயண அனுபவங்களை இந்நூலில் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.
7. நெறியாளர்
பேரா. எச். பாலசுப்பிரமணியம் (1932 - 2021) அவர்கள் பன்மொழி அறிஞராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் ஜேஎன்யு தமிழ்ப்பிரிவின் வருகைதரு பேராசிரியராகவும் விளங்கியுள்ளார்கள். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்காக ஜேஎன்யு தமிழ்ப்பிரிவின் மேனாள் பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்களுடன் இணைந்து “தொல்காப்பியம்” எனும் தமிழின் முதல் இலக்கண நூலை இந்தியில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார்கள். அன்னாரின் மறைவையொட்டி, ஜேஎன்யு தமிழ்ப்பிரிவு ஆய்வாளர்கள், பேராசிரியர் தங்களின் ஆய்விற்கு எவ்வாறு உதவினார் என உரை வழங்கினர். அந்த உரைகள் யாவும் கட்டுரைகளாகப் பெறப்பட்டு “நெறியாளர்” எனும் தலைப்பிலான இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
8. அறிவியல் தமிழ்த் தாத்தா
பேரா. இராம. சுந்தரம் (1938 - 2021) அவர்களின் நினைவையொட்டி ஜேஎன்யு தமிழ்ப்பிரிவு இணையவழி உரையமர்வு ஒன்றை ஏற்பாடு செய்தது. அப்போது வழங்கப்பெற்ற கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. வபேரா. இராம. சுந்தரம் அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ‘தமிழ் வளர்ச்சித்’ திட்டத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்று மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளுக்கான தமிழ்ப் பாடநூல்களையும் கலைச்சொற்களையும் உருவாக்கும் பணியில் அளப்பரிய பங்களிப்புகளைச் செய்துள்ளார்கள். தமிழில் அறிவியல், தொழிநுட்பம் சார்ந்த ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான சொற்களை உருவாக்கக் காரணமாக இருந்துள்ளார்கள் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
9. ஒப்பியல் பார்வையில் தமிழ்ச் செவ்வியல்
ஜேஎன்யு தமிழ்ப்பிரிவு செப்டம்பர் 2021 இல், கோவிட் – 19 பெருந்தொற்றுக் காலத்தில் இணையவழியில் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றை நிகழ்த்தியது. இக்கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற 13 கட்டுரைகளின் தொகுப்பாக்கமாக இந்நூல் அமைகிறது. தமிழ் இலக்கிய, இலக்கணங்களோடு தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், சிங்களம் உள்ளிட்ட மொழி இலக்கிய இலக்கணங்களை ஒப்பிட்டு ஆராய்வனவாக இக்கட்டுரைகள் அமைந்துள்ளன.
10. தமிழின் மீது தூரத்துப் பார்வை
பேரா. இ. அண்ணாமலை அவர்கள் தமிழ் இலக்கியத்திலும் மொழியியல் துறையிலும் புலமை பெற்ற மூத்த அறிஞர் ஆவார். இவர், அமெரிக்காவிலுள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றி, தற்போது பணிநிறைவு செய்துள்ளார். பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். பேராசிரியரின் தமிழ் ஆய்வுப் பங்களிப்புகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைகிறது.
11. முறைமை
ஜேஎன்யு தமிழ்ப்பிரிவு 2007 ஆம் ஆண்டு துவங்கப்பெற்று தற்போது 15 ஆம் ஆண்டில் தமிழ்த்துறை எனும் நிலையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஜேஎன்யு வில் தமிழ்ப்பிரிவு துவங்கியதிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையிலான துறைசார் நிகழ்வுகள் யாவும் “முறைமை” எனும் தலைப்பிலான இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
12. அரிஸ்டாட்டிலின் இயற்பியல் கருத்துநிலைத் தமிழாக்கம்
கிரேக்கத்தைச் சேர்ந்த செவ்விய மெய்யியலாளர் அரிஸ்டாட்டில். இயற்கையியல் சார்ந்த அவர்தம் கருத்துகள் ‘பிசிக்கே’ எனும் பெயரில் கிரேக்கத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. மாற்றம், முடிவிலி, இடம், வெற்றிடம், காலம் குறித்த கருத்துகள் இப்பனுவலில் உள்ளன. திரு த.க.தமிழ்பாரதன் & திரு க.ஜெயபாரதி இணைந்து, கருத்துநிலையில்(ஆங்கிலம்வழி) தமிழாக்கம் செய்த இந்நூல் 2023 சூலையில் இத்தாலியின் வெனீசு நகரத்தில் வெளியிடப்பெற்றது.
Comments
Post a Comment